தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குறிப்பாக கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதுடன், ஈரோட்டில் நிலவி வந்த 105 டிகிரி வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், மொடக்குறிச்சி பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே இருக்கும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கரூர் போன்ற பகுதிகளில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
