தமிழக அரசியல் களத்தில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் குறித்து இணையதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விஜய் மாலை 6 மணிக்கு மேல் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், அதன் காரணமாகவே அவர் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பினர்.

இந்த விமர்சனங்களுக்கு விஜய் முன்னதாகவே பதிலளித்திருந்தார். இருட்டு நேரத்தில்தான் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், கரூர் சம்பவம் போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு காரணத்திற்காகவே தான் மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

​இந்த நிலையில், விஜய் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் ஆரம்பத்திலிருந்தே மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், இது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பயிற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விஜய் பணிபுரிவார் என்றும், மிக அவசியமான இரவு நேர படப்பிடிப்புகள் இருந்தால் மட்டுமே அதற்குச் செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த நேர மேலாண்மை குறித்த தாயாரின் விளக்கம், தற்போது அவர் மீதான வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளது.