பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்; குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது எனத் தலைமை கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம், விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததற்காக பிரசாத் தற்காலிகமாக நீக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள பிரசாத், “பாஜகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. தூய மனதுடனேயே அந்த அறிக்கையை வெளியிட்டேன். கடந்த முறையைப் போலவே, இப்போதும் என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீக்கியிருப்பது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும், ஒரு சாதாரணத் தொண்டனாக கட்சிப் பணிகளைத் தொடருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் நிஷா ராஜா என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.