‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், பாகிஸ்தான் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 10 முக்கிய மறைவிடங்கள் அழிக்கப்பட்டதால், அந்த அமைப்புகள் முற்றிலும் பலவீனமடைந்துள்ளன.

குறிப்பாக, பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் ஆகியோர் வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி கடந்த ஓராண்டாகத் தலைமறைவாக உள்ளனர். மேலும், அந்த அமைப்புகளின் முக்கிய தளபதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது அந்த நாட்டுப் பயங்கரவாதக் குழுக்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், இந்தியா சிந்து நதி நீரைத் தடுத்திருப்பதால் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு ஐநா பாதுகாப்பு சபையின் உதவியை நாடியுள்ளது.

இது தவிர, இந்திய விமானங்களுக்குத் தனது வான்வெளியை மூடியதால் ஏற்பட்ட பல பில்லியன் டாலர் இழப்பு மற்றும் கடும் நிதி நெருக்கடியால், பாகிஸ்தான் தனது 13,000 வீரர்களையும் ஆயுதங்களையும் சவூதி அரேபியாவிற்கு வாடகைக்கு அனுப்பி நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.