கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெற்றுள்ள வெற்றியை இளைஞர்களின் மிகப்பெரிய எழுச்சியாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் இன்று ஆட்சி மாற்றத்தை உண்டாக்கியுள்ளதாகவும், புதிய அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தது அரசியலில் சகஜமான ஒன்றுதான் என்றும், வெற்றியும் தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். திரைப்பயணம் குறித்துப் பேசிய அவர், தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கான வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார்.
விஜய் அரசியலுக்குச் சென்றதால் திரையுலகில் அவர் இடத்தை நான் நிரப்புவேனா என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்றும், ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், போதை கலாச்சாரத்தைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், நேரம் வரும்போது தான் அரசியலில் இறங்குவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் லெஜண்ட் சரவணன் பேசினார்.
