தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை தராத நிலையில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கும் (த.வெ.க) கவர்னர் மாளிகைக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு தமிழக அரசியலை அதிரவைத்துள்ளது.

தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்ற த.வெ.க-வின் தலைவர் விஜய், நேற்று முன்தினம் கவர்னரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று காலை கவர்னர் அர்லேகர் திடீரென விஜய்யை அழைத்துப் பேசினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது விஜய்க்கு விளக்கப்பட்டது” என்று அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு 113 என்ற பலத்தில் உள்ள விஜய், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டார். ஆனால், கவர்னர் அதனை ஏற்கவில்லை. இதனால் வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப்பெற த.வெ.க நிர்வாகிகள் தற்போது தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இன்று மாலைக்குள் இந்தக் கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவுள்ளன.

த.வெ.க ஆட்சி அமைப்பதைத் தடுக்க, பரம எதிரிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மறைமுகமாக கைகோர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. சென்னையில் நடந்த தி.மு.க கூட்டத்தில், அவசர முடிவுகளை எடுக்க மு.க. ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவிட்டு, சென்னை திரும்புகிறார்.

இந்தக் குழப்பமான சூழலில், அ.தி.மு.க-வுக்கு தி.மு.க ஆதரவு அளித்தால் பா.ஜ.க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் கமலாலயத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் ஒரே எம்.எல்.ஏ போஜராஜன் இதில் பங்கேற்றுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதும், அமையப்போவது விஜய் தலைமையிலான அரசா அல்லது திராவிடக் கட்சிகளின் கூட்டணி அரசா என்பதும் தெரிந்துவிடும். இதனால் கோட்டை முதல் கவர்னர் மாளிகை வரை தமிழகமே திக் திக் நிமிடங்களில் உள்ளது.