பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில், ஒரு சிறுமி தனது நெருங்கிய தோழியாலேயே வஞ்சிக்கப்பட்டு, பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது தோழி ஒருநாள் இரவு தனியாக தூங்க பயமாக இருப்பதாகக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து, சிறுமிக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பிறகு, அந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை இணையத்தில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டி அச்சிறுமி மீது பலமுறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுமி கர்ப்பமான பிறகுதான் இந்த விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் குற்றவாளிகளின் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த நிலையில், தற்போது சிறுமிக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்தச் செய்தி ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் தந்தையை மட்டும் போலீஸார் தற்போது பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதி வேண்டி சிறுமி போராடி வரும் நிலையில், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.