பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தத் தேர்தலை இருவரும் தனித்தனியாகச் சந்தித்தனர். அன்புமணி ராமதாஸ் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், டாக்டர் ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி அமைத்தார். குறிப்பாக, அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் போட்டியிட்ட 18 தொகுதிகளிலும் ராமதாஸ் தனது ஆதரவாளர்களைத் தனித்துப் போட்டியிட வைத்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த நேரடி அரசியல் போர் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் அன்புமணி ஆதரவாளர்களான கணேஷ்குமார் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

அதே சமயம், டாக்டர் ராமதாஸ் தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் பாமகவுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியில் அன்புமணி ராமதாஸின் கரத்தையே வலுப்படுத்தியுள்ளன.