சென்னை ஆர்.கே.நகரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் என்பவர், 10 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நாளன்று, தனது உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தினேஷ் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துப் பெற்றோரிடம் கூற முற்பட்டபோது, “வெளியே சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன்” என தினேஷ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த ஆர்.கே.நகர் காவல்துறை, தினேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தற்போது தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டு புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தேர்தல் பணிகளில் முன்னணியில் இருந்த தவெக முக்கிய நிர்வாகியே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
