முன்னாள் உலகத் தரவரிசை முதன்மை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, தனது டென்னிஸ் பயணத்தில் மறக்க முடியாத, உடல் ரீதியாக மிகக் கடினமான ஒரு போட்டி குறித்த நினைவுகளைச் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 2009-ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற WTA சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலானதைத் தொடர்ந்து அவர் தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.
2009-ம் ஆண்டு தோஹாவில் நடந்த அந்த ரவுண்ட்-ராபின் போட்டியில், 19 வயதான இளம் வீராங்கனை வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் வேரா ஸ்வோனாரேவாவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வோஸ்னியாக்கிக்கு இடது கால் தசைநாண் பாதிப்பு இருந்தது. ஈரப்பதம் அதிகமுள்ள சூழலில் நீண்ட நேரம் விளையாடியதால், அந்த வலியை ஈடுகட்ட தனது உடலின் மற்ற பாகங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்.
This was me! Came in to the match with a left hamstring strain, over compensated for it with the rest of the body, it was a long match in very humid conditions, and I ended up in a full body cramp, but somehow found a way to win the match! Crazy to watch it back! 🤪 https://t.co/ZJJ36Rt9bI
— Caroline Wozniacki (@CaroWozniacki) May 4, 2026
போட்டியின் மூன்றாவது செட்டில், வோஸ்னியாக்கியின் உடல்நிலை மோசமடைந்தது. கால் தசைப் பிடிப்பால் துடித்த அவர், வலியால் தாள முடியாமல் மைதானத்திலேயே கண்ணீருடன் சரிந்து விழுந்தார். இரண்டு முறை மருத்துவ இடைவேளை எடுத்தும் வலி குறையவில்லை. கால்கள் செயலிழந்த நிலையில், கடுமையான வலியுடன் அவர் விளையாடிய விதம் பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்தது.
தற்போது அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்துள்ள வோஸ்னியாக்கி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இது நானே தான்! இடது கால் காயத்துடன் களமிறங்கி, உடல் முழுவதும் பிடிப்பு ஏற்பட்டு, எப்படியோ ஒரு வழியாக அந்தப் போட்டியில் வெற்றி பெற்றேன். இப்போது இதைத் திரும்பிப் பார்ப்பது மிகவும் பிரமிப்பாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, வோஸ்னியாக்கி அந்தப் போட்டியை 6-0, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார். உடல் ரீதியான வலியைத் தாண்டி, மனவலிமையால் ஒரு வீராங்கனை எத்தகைய சாதனையை நிகழ்த்த முடியும் என்பதற்கு இந்தப் போட்டி இன்றும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
