தமிழக அரசியல் வரலாற்றில் 17-வது சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘விசித்திரமான’ திருப்பத்தைச் சந்தித்துள்ளது. நான்கு முனைப் போட்டி நிலவிய இந்தக் களத்தில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் ஆண்ட கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களையும் பின்னுக்குத் தள்ளி, அறிமுகமான முதல் தேர்தலிலேயே “தளபதி” விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடம் பிடித்து முத்திரை பதித்துள்ளது.
இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் எனும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காததால், விஜய்யால் உடனடியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத சிக்கல் நீடிக்கிறது. ஒருபுறம் முதலிடம் பிடித்தும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத தவிப்பில் தவெக இருக்க, மறுபுறம் ஆளுங்கட்சியாக இருந்த திமுக 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியது அரசியல் வட்டாரத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவரால் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்திருந்தாலும், அவரது கட்சி ஒட்டுமொத்தமாக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அவரும் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைக்க முடியாமல் போனது ஒரு முரண்பாடான சோகமாக மாறியுள்ளது. மற்றொரு பக்கம், தனித்துப் போட்டியிட்டுத் தனது அரசியல் வலிமையை நிரூபிக்கத் துடித்த நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மூன்று தேர்தல்களில் களம் கண்டும் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியாத நிலையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் கூடப் பெற முடியாமல் போனது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத இந்தத் தொங்கு சட்டமன்ற நிலை, தமிழக அரசியலை ஒரு புரியாத புதிராக மாற்றியுள்ளது.
