தமிழக அரசியலில் இன்று ஒரு புதிய சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 109 இடங்களில் முன்னிலை வகித்து மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மெஜாரிட்டியை மிக நெருக்கத்தில் தொட்டுவிட்டு த.வெ.க தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இதுவரை கிண்டல் செய்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

​இந்த வெற்றியை உணர்ச்சிகரமான முறையில் கொண்டாடி வருகிறார் க்ளோரி என்ற தீவிர பெண் தொண்டர். தனது தலைவனின் வெற்றிக்காக இசிஆர் சாலையில் இருந்து பனையூர் தலைமை அலுவலகம் வரை முழங்காலிட்டே சென்று அவர் தனது நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார்.

“எங்க விஜய்யை எவ்வளவோ அசிங்கப்படுத்துனாங்க, கிண்டல் பண்ணாங்க… ஆனா இன்னைக்கு சைலெண்டா வந்து வைலெண்டா சரித்திரம் படைச்சிட்டாரு” என அவர் கண்ணீர் மல்கக் கூறிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தமிழகமே இப்போது பனையூரை நோக்கித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.