நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தான் பாதியிலேயே படிப்பை நிறுத்திய சென்னை லயோலா கல்லூரியிலேயே இன்று தனது தேர்தல் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், பெரம்பூரில் 1,12,127 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற அவர், அங்கிருந்து லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.

சினிமா கனவுக்காக எந்தக் கல்லூரியில் படிப்பை விட்டாரோ, அதே இடத்தில் இன்று ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் கால்பதித்தது “வாழ்க்கை ஒரு வட்டம்” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் முன்னிலை பெற்று, தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவர் லயோலா கல்லூரிக்குச் சென்றபோது வழிநெடுங்கிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.