நாகப்பட்டினத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக முகவர் ஒருவர், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்ததால் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அந்த முகவர் வருகை தந்துள்ளார்.
மேலும் தேர்தல் விதிகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அரசியல் கட்சித் தலைவர்களின் உருவம் அல்லது சின்னம் பொறித்த ஆடைகளை அணிந்து வர அனுமதி இல்லை என்பதால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முகவரை உடனடியாக வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும், அவர் தனது உடையை மாற்றிவிட்டு விதிகளுக்கு உட்பட்ட ஆடையில் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகள் அமலில் இருக்கும் நிலையில், விழிப்புணர்வு இன்றி கட்சி அடையாளத்துடன் வந்த முகவரின் செயல் அங்கிருந்தவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
