தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளில் நிலவும் இழுபறி மற்றும் புதிய கட்சிகளின் வரவு குறித்து ஆவேசமாகப் பேசிய அந்தத் தொண்டர், “ஆயிரம் நலத்திட்டங்களைச் செய்து, மக்களுக்காக ஓயாமல் உழைத்த உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களை விட்டுவிட்டு, இன்று புதிதாக அரசியலுக்கு வந்தவர்களை மக்கள் தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிறார்களே” என்று விம்மி விம்மி அழுதார். “மகளிர் உரிமைத் தொகை முதல் சேப்பாக்கம் தொகுதியின் வளர்ச்சி வரை உதயநிதி அண்ணன் செய்த சாதனைகள் ஒருபுறம் இருக்க, திடீரென வந்தவர்களுக்கு மக்கள் தரும் முக்கியத்துவத்தை ஏற்க முடியவில்லை” என அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அண்ணா அறிவாலயத்தில் மற்ற தொண்டர்கள் அவரைத் தேற்ற முயன்ற போதிலும், திராவிட இயக்கத்தின் உழைப்புக்குக் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வேதனையில் அவர் அழுத காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.