ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஏழாவது தோல்வியைப் பதிவு செய்துள்ள நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அடைந்த படுதோல்வி, அணியின் பிளே-ஆஃப் கனவை ஏறக்குறைய தகர்த்துள்ளது. பொதுவாக அணி தோற்கும்போது கேப்டன் மீது பழி விழுவது வழக்கம் தான் என்றாலும், இம்முறை முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும், மும்பை அணி வீரர்களுக்கு எதிராகவும் சில அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

​மனோஜ் திவாரி பேசுகையில், “மும்பை அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவை மட்டுமே குறை சொல்வது நியாயமில்லை. நான் களத்தில் பார்ப்பதை வைத்துச் சொல்கிறேன், ஹர்திக்கிற்கு ஆதரவாக அந்த அணியில் யாருமே நிற்பதாகத் தெரியவில்லை. ஒரு கேப்டன் வீரர்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அதே சமயம் வீரர்களும் தங்கள் தலைவருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மும்பை அணியில் ஹர்திக்கிற்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது,” என்று கூறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஹர்திக், மும்பையில் தடுமாறுவதற்கு வீரர்களிடையே நிலவும் ஒருங்கிணைப்பு இன்மையே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.