ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் ‘குழந்தை தொழிலாளர்’ முறையில் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“15 வயது சிறுவனை ஐபிஎல் போன்ற வணிக ரீதியான தொடரில் விளையாட வைப்பது குழந்தை தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது. வைபவ் சூர்யவன்ஷி இப்போது விளையாடுவதை நிறுத்திவிட்டு தனது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து தொழிலாளர் ஆணையர் உரிய விசாரணை நடத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.  இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அசுர வேகத்தில் உள்ளது. நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு நெருங்குவதற்கு இவருடைய அதிரடி பேட்டிங்கே முக்கியக் காரணமாகும்.

ஆரஞ்சு தொப்பி ரேசில் 404 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். நடப்புத் தொடரில் இதுவரை 37 சிக்சர்களை விளாசி, அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு 35 பந்துகளில் சதம் அடித்து கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை பிடித்திருந்த இவர், இந்த ஆண்டும் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த சீசனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக வைபவ் சூர்யவன்ஷி பார்க்கப்படுகிறார். இந்நிலையில், இந்த குழந்தை தொழிலாளர் புகார் அவரது விளையாட்டுப் பயணத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.