ஹாங்காங்கில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வார விடுமுறை நாளில் பொது இடங்களில் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு தற்காலிக வீடுகள் அமைத்து ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் சட்டப்படி, வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை வேலைக்கு அமர்த்தியவர்களின் வீட்டிலேயே தங்க வேண்டும். இதனால், விடுமுறை நாட்களில் அவர்களுக்கு எனத் தனியிடம் இல்லாத சூழல் நிலவுகிறது.
‘ரஃபா’ என்ற சமூக வலைதளப் பிரபலம் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலங்களுக்கு அடியிலும், நடைபாதைகளிலும் அட்டைப் பெட்டிகளை மறைப்பாக வைத்துக்கொண்டு தங்களின் பொழுதைக் கழிப்பதைக் காண முடிகிறது.
இந்த நிலையை “கண்களுக்குத் தெரியாத உழைப்புச் சுரண்டல்” என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பிழைப்புக்காக வந்த இந்தப் பெண்கள், ஆடம்பர வீடுகளைச் சுத்தம் செய்தாலும், விடுமுறை நாளில் தங்குவதற்கு இடமில்லாமல் ‘ஒரே நாள் வீடற்றவர்களாக’ தெருக்களில் தஞ்சம் புகுகின்றனர்.
ஹாங்காங்கின் அதிகப்படியான வீட்டு வாடகை மற்றும் இடநெருக்கடி காரணமாக இந்த அவலநிலை நீடிக்கிறது. வசதி படைத்த முதலாளிகளுக்கும், அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஏழைப் பணியாளர்களுக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய பொருளாதார இடைவெளியை இந்த வீடியோ உலகிற்குப் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
