மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

அதாவது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மதியம் சுமார் 3:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணை அழைத்து வந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரிக்கு முன்னால் இறக்கிவிட்டுச் செல்கிறார். அந்தப் பெண் அங்கிருந்து நடக்கத் தொடங்கிய சில நொடிகளில், பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு லாரி அவர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் அந்தப் பெண்ணை சுமார் 30 அடி தூரம் இழுத்துச் சென்ற அந்த லாரி, முன்னால் நின்றுகொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் முன்னால் நின்ற லாரி சில மீட்டர்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையே சிக்கிய அந்தப் பெண், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விபத்து நடந்த சமயத்தில் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஓட்டுநரைத் தடுத்து வைத்து லாரியைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபோதையில் வாகனத்தை இயக்கி ஒரு உயிரைப் பறித்த ஓட்டுநரின் செயல் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.