அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ எடுத்து, பிளாக்மெயில் செய்து சுமார் 8.8 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது அறிமுகமான நிகில் குரானா என்ற இளைஞர், முதியவரிடம் நட்பாகப் பழகி செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார். முதலில் தனது தாயின் மருத்துவச் செலவு மற்றும் படிப்புக்காகப் பணம் கேட்டு வாங்கிய அந்த இளைஞன், பின்னர் முதியவரிடம் வீடியோ காலில் ஆபாசமாகப் பேசி அதை ரகசியமாகப் பதிவு செய்துள்ளான்.
இந்த வீடியோவை வைத்து நிகில் மற்றும் அவனது கூட்டாளிகள், முதியவரை மிரட்டத் தொடங்கியுள்ளனர். வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும், உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டி அவரிடமிருந்து சிறுகச் சிறுக 8.88 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர்.
தங்களை கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் என்று கூறி முதியவரை அவர்கள் மேலும் பயமுறுத்தியுள்ளனர். தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான முதியவர், இறுதியாகக் காவல்துறையில் புகாரளித்தார்.
தற்போது மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் வீடியோ கால் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்துப் பொதுமக்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
