மே தினமான இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர் விலை 261 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழிலாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த விலை உயர்வைக் குறித்துக் கூறுகையில்,

சிலிண்டர் விலை உயர்வது என்பது வெறும் சிலிண்டர் விலை உயர்வு மட்டுமல்ல; அது ஏழையின் தட்டு மற்றும் ரொட்டியின் விலை உயர்வு. கையில் காசு கொடுத்து வாங்கி உண்பவர்களுக்குத் தான் அதன் வலி தெரியும். மற்றவர்களின் தட்டில் திருடுபவர்களுக்கு இது புரியாது. மேலும், 1,000 ரூபாயில் வெறும் 7 ரூபாயைக் குறைத்துவிட்டு பா.ஜ.க யாருக்கு உபகாரம் செய்கிறது? விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பா.ஜ.க எப்போது கண்டனத் தீர்மானம் கொண்டு வரும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசை “விலைவாசி மனிதன் மோடி என விமர்சித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை எப்படியெல்லாம் உயர்ந்திருக்கிறது என அவர்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி

  • ஜனவரி: ரூ.111 உயர்வு

  • பிப்ரவரி 1: ரூ.50 உயர்வு

  • மார்ச் 1: ரூ.31 உயர்வு

  • மார்ச் 7: ரூ.115 உயர்வு

  • ஏப்ரல் 1: ரூ.218 உயர்வு

  • மே 1 (இன்று): ரூ.993 உயர்வு

கடந்த 4 மாதங்களில் மட்டும் மொத்தமாக சிலிண்டர் விலை 1,518 ரூபாய் உயர்ந்துள்ளதாகக் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. “ஆண்டு முடிய இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், மோடியின் ‘வசூல் வேட்டை’ தொடர்கிறது. முதலில் ஆதார் கார்டை வைத்து சிலிண்டர் கொடுத்துவிட்டு, இப்போது அதன் விலையை ஏற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள்” என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.