ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் ஒரு இளைஞரைக் கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்யலகூடெத்தைச் சேர்ந்த சிவ சீனிவாஸ் என்ற இளைஞர், தனது வீட்டில் இருந்தபோது நாகப்பாம்பு ஒன்றால் கடிக்கப்பட்டார்.

மேலும் உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஜங்காரெட்டிகூடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அன்றிரவு சுமார் 10 மணி அளவில் அவரைத் தாக்கிய அதே பாம்பு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் வாசலுக்கு வந்துள்ளது.

இதனால் பாம்பைக் கண்ட மருத்துவமனை ஊழியர்களும், சிவ சீனிவாசின் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்து அலறியடித்தனர். நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்திய அந்தப் பாம்பு, பின்னர் அங்கிருந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டது.

இந்நிலையில் பொதுவாகப் பாம்புகள் கடித்த நபரைத் தேடி வரும் என்பது கிராமப்புறக் கதைகளில் நிலவும் நம்பிக்கையாக இருந்தாலும், உண்மையில் அப்படி ஒரு சம்பவம் மருத்துவமனை வளாகத்திலேயே நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.