மகாராஷ்டிர மாநிலம் சந்தன்நகரில் காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவரின் கழுத்தை அவரது காதலனே கத்தியால் அறுத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயது உஜலா தேவி, சந்தன்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தன்னுடன் பணியாற்றிய திலீப் ரத்தோட் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த திலீப், புதன்கிழமை இரவு உஜலா தேவி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்துள்ளார்.

மறைத்து வைத்திருந்த கத்தியால் உஜலாவின் கழுத்தை அறுத்துவிட்டு அவர் தப்பியோடினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண், மரணப் போராட்டத்திலும் தனது சகோதரனுக்கு வீடியோ கால் செய்து தான் உயிருக்குப் போராடுவதைக் காட்டியுள்ளார்.

வீட்டிற்கு விரைந்த சகோதரர் மற்றும் உறவினர்கள் உஜலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்து அறுக்கப்பட்டதால் குரல் வராத நிலையில், அந்தப் பெண் சைகை மூலம் பேனா மற்றும் காகிதத்தைக் கேட்டு வாங்கி, தன்னைக் கொல்ல முயன்றது “திலீப் ரத்தோட்” தான் என்று எழுதித் தந்துள்ளார்.

தற்போது அந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள காதலன் திலீப் ரத்தோடைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.