உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்னும் இணையவழி மிரட்டலுக்கு பயந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான டைரிக் குறிப்பில், காவல்துறை சீருடை அணிந்த மர்ம நபர்கள் வீடியோ கால் மூலம் தன்னை மிரட்டியதாகவும், ஒரு பெரிய குற்றத்தில் தனக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஜியா மகளே, அம்மா போக வேண்டியிருக்கிறது…” என அவர் தனது மகளுக்காக எழுதியுள்ள கடைசி வார்த்தைகள், இந்த ஆன்லைன் மோசடி கும்பல் சாதாரண மக்களை எவ்வளவு தூரம் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை வேதனையுடன் வெளிப்படுத்துகிறது.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் சிபிஐ அல்லது காவல் துறை அதிகாரிகள் போல வேடமிட்டு, ஸ்கைப் அல்லது வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பொதுமக்களைத் தொடர்பு கொள்கின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளதாகக் கூறி, விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் மக்களை கேமராவிற்கு முன்பே அமர வைத்து “டிஜிட்டல் சிறை”ப்படுத்துகின்றனர்.
இத்தகைய சூழலில் மக்கள் பதற்றமடையாமல், அதிகாரப்பூர்வமான எந்தவொரு அரசு அமைப்பும் வீடியோ கால் மூலம் யாரையும் கைது செய்யாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மிரட்டல்கள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிப்பது அவசியமாகும்.
