ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் மாகாணத்தில் தங்கம் பிரித்தெடுக்கும் பணி தற்போது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. தலிபான் ஆட்சியின் கீழ் இப்பகுதியில் உள்ள தங்கச் சுரங்கங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. இயற்கை வளங்கள் நிறைந்த இந்த மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்தச் சுரங்கத் தொழில், அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
மேலும் நவீன இயந்திரங்கள் மற்றும் பாரம்பரிய முறைகள் என இரண்டையும் பயன்படுத்தி இங்கிருந்து தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தங்கச் சுரங்கத் திட்டத்தின் மூலம் சுமார் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, இந்தத் தங்கம் அகழ்வாராய்ச்சிப் பணி வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு முக்கியத் துறையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது வருவாயைப் பெருக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் ஆப்கானிஸ்தான் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
