பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மகுடத்தை அலங்கரிக்கும் உலகப் புகழ்பெற்ற ‘கோகினூர்’ வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானியின் ஒரு கருத்தால் மீண்டும் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவரிடம் கோகினூர் வைரத்தை அதன் பிறப்பிடமான இந்தியாவிடமே திருப்பித் தருமாறு தான் வலியுறுத்தப் போவதாக மம்தானி தெரிவித்துள்ளார். “இந்த வைரம் வெறும் நகை மட்டுமல்ல, அது காலனியாதிக்கத்தால் பறிக்கப்பட்ட இந்தியாவின் கலாச்சார அடையாளம்” என்ற அவரது பேச்சு உலகெங்கும் உள்ள இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஒளி மலை’ (Mountain of Light) என்று பொருள்படும் கோகினூர் வைரம், இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டு முகலாய மன்னர்கள், பாரசீக ஆட்சியாளர்கள், ஆப்கானியத் தலைவர்கள் மற்றும் சீக்கிய மகாராஜாக்கள் எனப் பல்வேறு கைமாறி வந்துள்ளது. கடந்த 1849-ஆம் ஆண்டு ஆங்கிலேய-சீக்கியப் போரின் முடிவில், லாகூர் ஒப்பந்தத்தின்படி இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அரசு இந்த வைரத்தைச் சட்டப்பூர்வமாகப் பெற்றதாகக் கூறினாலும், அன்றைய சூழலில் கட்டாயத்தின் பேரில் சிறுவன் துலீப் சிங்கிடம் இருந்து இது பறிக்கப்பட்டதாக இந்தியத் தரப்பில் நீண்டகாலமாகப் புகார் கூறப்பட்டு வருகிறது. தற்போது லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த வைரத்தை மீட்க இந்தியா பலமுறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
Socialist NYC Mayor Zohran Mamdani says he would tell King Charles to return the Koh-i-Noor Diamond to India if he met him. pic.twitter.com/ehq6eLWaVw
— Oli London (@OliLondonTV) April 29, 2026
சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் உள்ள காலனியாதிக்க காலத்துப் பொருட்களை அந்தந்த நாடுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. மம்தானியின் இந்தக் கருத்து, இந்தியாவின் கலாச்சார உரிமையை உலக மேடையில் மீண்டும் உரக்கப் பேச வைத்துள்ளது. கோகினூர் வைரத்தின் மீதான இந்த அறப்போர், வரலாறு மற்றும் அரசியலின் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
