சுமார் 14 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றிய பெண் ஒருவர், மாதம் 5 லட்ச ரூபாய் ஊதியம் ஈட்டும் உயரிய பணியை “தங்கக் கூண்டு” எனக் குறிப்பிட்டு அதிலிருந்து விலகிய சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜோயீதா (Joyeeta) என்ற அந்தப் பெண்மணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிரடி முடிவுக்கான காரணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

மாதம் 5 லட்ச ரூபாய் சம்பளம் என்பது நான் விரும்பாத ஒரு வாழ்க்கை முறையை எனக்குக் கொடுத்தது. அந்தப் பணம் எனக்கு விலையுயர்ந்த உணவுகளையும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களையும் வழங்கியது உண்மைதான். ஆனால், அவற்றுக்கு ஈடாக 24 மணிநேரமும் வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும், எனது குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழலையும் உருவாக்கியது.

கௌரவம் மற்றும் அந்தஸ்துக்காக அதிக ஊதியம் பெறும் வேலைகளைத் தேடி ஓடுவது, இறுதியில் நம்மையே அந்த வேலைக்கு அடிமையாக்கிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
“வாழ்க்கை முறை ஆடம்பரம் என்பது ஒரு விலையுயர்ந்த பொறி. அது நம்மைச் சோர்வடையச் செய்யும் வேலையிலேயே நம்மைத் தங்கிவிடச் செய்கிறது. நான் வாங்கிய அந்தஸ்து, உண்மையில் என்னை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைச் சார்ந்திருக்க வைத்தது,” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உயரிய வேலையைத் துறந்துவிட்டு, தற்போது ஒரு பகுதிநேர ‘ஃபிராக்ஷனல் சிஎம்ஓ’ (Fractional CMO) ஆகப் பணியாற்றி வருகிறார். “எந்தவொரு கடன் தவணையும் (EMI) இல்லாத நிலையை உறுதி செய்த பின்பே இந்த முடிவை எடுத்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோயீதாவின் இந்தப் பதிவு இணையத்தில் பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதம் 5 லட்ச ரூபாய் ஊதியத்தை விட ஒரு தனி மனிதனுக்குத் துணிச்சல் வேண்டும்என ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

“வேலை என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல, அது மன திருப்தி சார்ந்தது” எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், “வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களுக்கு இத்தகைய சவாலான வேலைகள் அவசியம்; ஒவ்வொருவரின் முன்னுரிமை காலத்திற்குத் தகுந்தபடி மாறும்” என்ற மாற்றுக்கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் ஊதியம் உங்களுக்கு வாங்கித் தந்த தேவையற்ற ஒரு பொருள் எது? என்ற கேள்வியுடன் அவர் தனது பதிவை முடித்துள்ளார். கார்ப்பரேட் உலகின் கசப்பான உண்மைகளைப் பேசி வரும் ஜோயீதாவின் இந்த ‘டிஜிட்டல்’ கருத்துக்கள் தற்போது இளைஞர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Joyeeta (@theog_girl__)