தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், சிக்கன் குழம்பு சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தனது கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான சிவாஜி என்ற பழைய இரும்பு வியாபாரி, சனிக்கிழமை இரவு தனது மனைவி லட்சுமியிடம் சிக்கன் குழம்பு ஏன் சமைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உறவினர்கள் வந்து சமாதானம் செய்தும் சண்டை ஓயாத நிலையில், ஆத்திரமடைந்த லட்சுமி அரிவாளால் சிவாஜியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த இரத்தப்போக்கு ஏற்பட்டு சிவாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம் என்றும், பலமுறை பெரியவர்கள் வந்து சமாதானம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காக லட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

இதேபோல், தெலுங்கானாவின் ஹனுமகோண்டா மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது இரண்டு மகள்களுடன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மற்றொரு சோகமான சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.