வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜீவசாகாப்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாஜக நேரடியாக வெற்றி பெற்றால் மக்கள் அதை எளிதில் சந்தேகப்படுவார்கள் என்பதால், அவர்கள் புதிய வியூகங்களைக் கையாள வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, நடிகர் விஜய் வெற்றி பெற்றால், அவருக்கு சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதாக மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள்; இந்த ‘நம்பிக்கையை’ முதலீடாக வைத்து EVM இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்படலாம் என அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘கோஸ்ட் ஓட்டிங்’ (Ghost Voting) எனப்படும் மாய வாக்குப்பதிவு முறை தமிழகத்திலும் அரங்கேற வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்படும் வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும் நடைமுறையை அவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அவர் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.