உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் பாதியிலேயே நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பல்லவபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சத்ரபால் சிங் என்ற உதவி ஆய்வாளர், போதைப்பொருள் வழக்கு ஒன்றில் சிக்கிய பெண்ணின் பெயரை நீக்குவதற்காக லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஏற்கெனவே ஒரு லட்சம் ரூபாய் பெற்றிருந்த அவர், மேலும் 50,000 ரூபாய் கேட்டுப் பேரம் பேசி, இறுதியில் 10,000 ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது ஊழல் தடுப்புப் பிரிவினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையால் சத்ரபால் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இன்னும் எட்டு நாட்களில், அதாவது மே 5-ம் தேதி, உத்தரப் பிரதேச அமைச்சரின் மருமகளுடன் அவருக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகன் லஞ்ச வழக்கில் கைதான செய்தியை அறிந்த பெண் வீட்டார், உடனடியாக இந்தத் திருமணத்தை ரத்து செய்தனர்.
இந்நிலையில் ஒரு சிறிய தொகைக்காக ஆசைப்பட்டு தனது வாழ்நாளின் முக்கிய பந்தத்தையும், நற்பெயரையும் இழந்த அந்த அதிகாரி, தற்போது சிறையில் தனது தவறுக்காகக் கண்ணீர் விட்டு வருந்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
