இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது எக் (Egg) பிரியாணியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட முட்டை பிரியாணியில் புழுக்கள் நெளிவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ரயிலில் பணியாற்றும் ஊழியர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

“நீங்கள் உணவு வழங்குகிறீர்களா அல்லது பயணிகளின் உயிருடன் விளையாடுகிறீர்களா? ஏசி பெட்டியில் இருக்கும் அனைத்து பயணிகளுக்கும் இது போன்ற தரமற்ற உணவைத்தான் வழங்குகிறீர்களா? இதை யாராவது தெரியாமல் சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என அந்த பயணி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஊழியர், “உணவு வெளியில் இருந்து வருகிறது, நாங்கள் தயார் செய்யவில்லை. உங்களுக்கு வேறு உணவு தருகிறோம்” என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளதாவது: “சம்பந்தப்பட்ட உணவு விநியோக ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரக் குறைபாடு மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு  நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால், அந்த உணவகம் உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், அவர்களின் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் அகமதாபாத் – மும்பை வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.