சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-1 வகுப்பு பயின்று வரும் அந்தச் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மயக்க மருந்து கலந்த குளிர்பானங்களைக் கொடுத்து சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
