கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் (30) என்ற டிரைவர், தனது மனைவி அஞ்சனாவுடன் வசித்து வந்தார். அஞ்சனாவின் தோழியான மில்னா (24), அடிக்கடி தோழி வீட்டிற்கு வந்து சென்றபோது, ஸ்ரீஜித்துக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மனைவி அஞ்சனா பலமுறை கண்டித்தும், அவர்கள் தங்களது உறவைத் தொடர்ந்தனர்.

இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மோதலில் மனமுடைந்த அஞ்சனா, சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மில்னாவிற்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மில்னா, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து மாயமானார்.

இதுகுறித்து மில்னாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, ஸ்ரீஜித் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் மில்னாவும் ஸ்ரீஜித்தும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்காதலால் இரண்டு குடும்பங்கள் சீரழிந்த இந்தச் சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.