குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் உள்ள ஒரு பழைய பூட்டிய வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது, அங்கிருந்த மரப் பெட்டி ஒன்றிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் ஒரு கோரமான கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. ஸ்மிமர் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணியாற்றி வந்த ஷில்பா சால்வி என்பவரைக் காணவில்லை என அவரது கணவர் விஷால் சால்வி போலீசில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், விஷால் திடீரென மாயமானார். அவர் தனது 14 வயது மகனுக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதமே இந்தக் கொலையை அம்பலப்படுத்தியது. அந்தக் கடிதத்தில், “நான்தான் உன் அம்மாவைக் கொன்றேன், அவரது உடல் பழைய வீட்டில் பெட்டிக்குள் உள்ளது” என விஷால் குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஷில்பாவின் உடல் ஒரு மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அது வெளியே தெரியாமல் இருக்க அதன் மேல் சிமெண்ட் ஊற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. வேலையில்லாமல் இருந்த விஷால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலை யாருக்கும் தெரியாமல் சிமெண்ட் கொண்டு மறைத்துவிட்டு, 4 நாட்களாக ஒன்றுமே தெரியாதது போல நாடகமாடியுள்ளார். தற்போது விஷாலைக் கைது செய்துள்ள போலீசார், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை எனத் தெரிவித்துள்ளனர்.