உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, மூன்று இளைஞர்களின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் அப்போது அங்கு வந்திருந்த அவரது நண்பர்களான அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகியோர் விளையாட்டாக ஜீது சைனியின் முகத்தில் கேக்கைப் பூசியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதனால் தகராறுக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகள், சிறிது நேரம் கழித்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு இருந்த மூன்று நண்பர்களையும் நோக்கி அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய விளையாட்டு விபரீதமாகி மூன்று உயிர்களைப் பறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.