ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த சனிக்கிழமை அன்று பானி பூரி சாப்பிட்ட அந்த சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

மேலும் உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான். மேலும், குழந்தைகள் உட்பட 18 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ‘உணவு நச்சு’ காரணமாக ஏற்பட்ட பாதிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 18 பேரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பானி பூரி விற்பனையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில், முஃபசில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முழுமையான மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.