தமிழ் திரையுலகில் ‘மார்க்கண்டேயன்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் மூத்த நடிகர் சிவக்குமார். 84 வயதைக் கடந்த நிலையிலும், இன்றும் அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் காணப்படுபவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும் சமூகப் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில், பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் சிவக்குமார் பேசியதாவது,

“என்னுடைய 100-வது திரைப்பட விழாவின் போது கலந்துகொண்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘சிவக்குமார் சாகும் வரை இளமையாகவே இருப்பான்’ என்று எனக்கு ஒரு சாபம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் அன்று விளையாட்டாகச் சொன்ன அந்த வார்த்தைகள்தான் இன்றும் என்னை இப்படி இளமையாக வைத்திருக்கிறது.

தொடர்ந்து தனது உடல்நலம் குறித்துப் பேசிய அவர், “எனக்கு தற்போது 85 வயது ஆகிறது. ஆனால், என்னைப் பார்த்தால் 85 வயது ஆனவர் போலத் தெரிகிறதா? எம்.ஜி.ஆர் அன்றே சொன்னது போல, இன்றும் அதே ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் திரையுலக ஜாம்பவான்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை சிவக்குமார் பகிர்ந்துகொண்ட இந்த நிகழ்வு, அங்கிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.