மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரயிலுக்குள் கதறி அழுவதும், சக பயணிகள் அவருக்கு ஆறுதல் கூறுவதும் பதிவாகியுள்ளது.

ராணிநகர் ரயில் நிலையத்தைக் கடந்த சற்று நேரத்தில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்தவுடன் பயணிகள் அவசர கால சங்கிலியை இழுத்தும், ரயில்வே உதவி எண்களைத் தொடர்பு கொண்டும் ரயில் நிறுத்தப்படவில்லை என்றும், உதவிக்கு யாரும் வரவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், அடிக்கடி தேவையில்லாமல் சங்கிலியை இழுப்பதே இது போன்ற அவசர காலங்களில் ரயில் தாமதமாக நிற்கக் காரணம் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

“>

 

இந்த விபத்து எப்போது நடந்தது என்பது குறித்தோ அல்லது தவறி விழுந்த சிறுவனின் நிலை குறித்தோ ரயில்வே தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகள் குறித்து இந்தச் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.