ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், சக மாணவர்களாலேயே ஒரு சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவர் ஒருவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஒருவர் என மூவரும் சேர்ந்து அந்தச் சிறுவனைப் பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அந்தச் சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகக் கடும் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இந்தக் கொடூரம் ஒருமுறை மட்டுமன்றி, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்தச் சிறுவன் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததைக் கவனித்த அவனது தந்தை, பொறுமையாக விசாரித்தபோது தான் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

உடனே தந்தை அளித்த புகாரின் பேரில், 3 சிறுவர்கள் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தற்போது தீவிர ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களிடையே நிலவும் இத்தகைய வன்முறைப் போக்கு சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.