சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது 10 வயது மகனை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த வாலிபர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூரை அடுத்த கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (33), கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகன் கிஷாந்துடன் (10) வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்த சத்யாவுக்கு, அங்கு மேலாளராகப் பணியாற்றிய சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
சம்பவத்தன்று நள்ளிரவு சத்யாவின் வீட்டிற்கு வந்த சக்திவேல், அவரை உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சத்யா கடும் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சத்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் சத்யாவின் வலது கை மணிக்கட்டு துண்டாகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்து அலறிய 10 வயது மகன் கிஷாந்தையும் விடாத சக்திவேல், அந்தச் சிறுவனின் தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டியுள்ளார். ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய சத்யா தனது தந்தை வீட்டுக்கு ஓடி வந்து விழுந்துள்ளார்.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சத்யாவும் சிகிச்சை பலனின்றி பரிசோதனைக்கு பின் உயிரிழந்தார்.
இதற்கிடையே, கொலை செய்துவிட்டு தப்பியோடிய சக்திவேல், போலீசாருக்கு பயந்து அருகில் உள்ள ஒரு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நேரத்தில் கள்ளக்காதலி, அவரது மகன் மற்றும் காதலன் என மூன்று பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
