பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் மனிதாபிமானத்தையும் நீதியையும் பறைசாற்றும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காய்காட் பகுதியைச் சேர்ந்த அம்ரிக்கா தேவி என்ற முதியவர், பீகார் காவல்துறையில் பணியாற்றி மறைந்த தனது கணவரின் சேமிப்புப் பணத்தைப் பெற முடியாமல் தவித்து வந்தார். பெற்ற பிள்ளைகளே அந்தத் தாயை அடித்துத் துன்புறுத்தியதோடு, சொத்துக்காக அவரை நடுத்தெருவில் அலையவிட்டனர். இந்த இக்கட்டான சூழலில், மனித உரிமைகள் வழக்கறிஞர் எஸ்.கே. ஜா அந்தத் தாய்க்காகக் களமிறங்கினார்.
எந்தவிதக் கட்டணமும் இன்றி அந்த ஏழைத் தாய்க்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்திய வழக்கறிஞர், இறுதியில் அம்ரிக்கா தேவிக்குச் சேர வேண்டிய 21 லட்சம் ரூபாய் பணத்தை முழுமையாகப் பெற்றுத் தந்துள்ளார். தீர்ப்பு வந்தவுடன் நீதிமன்றத்திலேயே வழக்கறிஞருக்கு ஆசி வழங்கிய அந்தத் தாய், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். “தேவைப்படுபவர்களுக்கு நீதி கிடைப்பதே எனக்குப் பெரிய சந்தோஷம்” என்று வழக்கறிஞர் எஸ்.கே. ஜா கூறியது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. காசுக்காக ஓடும் காலக்கட்டத்தில், இப்படியும் ஒரு மனிதர் என முசாபர்பூர் மக்கள் அந்த வழக்கறிஞரைக் கொண்டாடி வருகின்றனர்.
