பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் லூக் ரோஞ்சி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரின் அநாகரிகமான நடத்தையால் ஆவேசமடைந்தார்.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரோஞ்சியிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோது, இடையில் புகுந்த மற்றொரு பத்திரிகையாளர் அநாகரிகமாகத் தனது கேள்வியைக் கேட்கத் தொடங்கினார். இதனால் பொறுமையிழந்த ரோஞ்சி, “சார், நாங்கள் இங்கே ஒரு வரிசை முறையில் போய்க்கொண்டிருக்கிறோம்.
அவர் கேட்கட்டும், எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் தயவுசெய்து நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க முடியுமா?” என முகத்திற்கு நேராகப் பேசி அமைதியாக்கினார்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால் இது நாட்டுக்கே அவமானம்” என அங்கிருந்த ஊடக மேலாளரே நிருபர்களை எச்சரிக்கும் நிலை ஏற்பட்டது.
