உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த திவ்யான்ஷ் (11) என்ற சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து குருகுல நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அவனது பிரேத பரிசோதனை அறிக்கை ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

சிறுவனின் உடலில் தலை முதல் கால் வரை மொத்தம் 42 கடுமையான காயங்கள் இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தனது மகனைப் பாதுகாப்பாகப் படிக்க அனுப்பிய இடத்தில், அவன் உடலெங்கும் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குருகுலத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கல்வியின் பெயரால் நடந்த இந்த அநீதிக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.