நாட்டை நிர்வகிக்கப் போகும் வருங்கால அதிகாரிகளை உருவாக்கும் சிவில் சர்வீஸ் தேர்விலேயே, வெறும் 300 ரூபாய்க்காக மொபைல் போனைப் பயன்படுத்த அனுமதித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்குள்ள சர்வோதயா கல்லூரியில் நடந்த பி.ஏ சிவில் சர்வீஸ் தேர்வின் போது, மாணவர்கள் ஹாயாக ஹாலுக்குள் அமர்ந்து மொபைல் போன் மூலம் கூகுளில் விடைகளைத் தேடி எழுதுகின்றனர்.

இந்த முறைகேட்டிற்கு கல்லூரி நிர்வாகமே ஒரு மாணவருக்கு 300 ரூபாய் வீதம் வசூலித்து அனுமதி கொடுத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சுமார் 400 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், சரியான வசதிகள் இன்றி மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டதோடு, கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மறுத்து, நேர்மையாகத் தேர்வு எழுத நினைத்த சில மாணவர்களே இந்த ஊழலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

“பீகாரில் முறைகேடு நடந்தால் மட்டும் பெரிதாகப் பேசும் மீடியாக்கள், இப்போது மகாராஷ்டிராவைக் கண்டு கொள்ளாதது ஏன்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.