ஐபிஎல் 2026-ன் விறுவிறுப்பான ‘எல் கிளாசிகோ’ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த காரியம் ரசிகர்களைக் கடும் கொந்தளிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தத் தோல்விக்கு பிறகு மைதானத்தில் ஹர்திக் பாண்டியா எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஏற்கனவே இவரது கேப்டன்சியில் மும்பை அணி தடுமாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவ்வளவு பெரிய அவமானகரமான தோல்விக்குப் பின்னரும் ஒரு கேப்டனாக பொறுப்பில்லாமல் ஆடியது மும்பை ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் 2 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கிய ஹர்திக், பேட்டிங்கில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார்.

“பவர்பிளே விக்கெட்டுகளே தோல்விக்குக் காரணம், அடுத்த போட்டியில் தவறுகளைத் திருத்திக் கொள்வோம்” என்று ஹர்திக் சமாதானம் சொன்னாலும், மைதானத்தில் அவர் ஆடிய ஆட்டம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. “ரோஹித் சர்மாவை தூக்கிட்டு இவரைப் போய் கேப்டனாக்கினீங்களே” என நெட்டிசன்கள் ஹர்திக்கை சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.