தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது ஆட்சி மாற்றத்திற்கான தெளிவான அறிகுறி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மனதில் இருந்த கடும் கொந்தளிப்பே இந்த வரலாறு காணாத வாக்குப்பதிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் கொதிப்படைந்திருந்ததாகவும், ஆழ்கடலின் பிரளயம் போல இருந்த அந்த கோபம் இப்போது வாக்குகளாக வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் உழைப்பையும், குறிப்பாக பாமக தொண்டர்களின் வேகத்தையும் பாராட்டியுள்ள அன்புமணி, இந்தத் தீர்ப்பு தமிழக மக்களுக்கு “நரக ஆட்சியிலிருந்து” விடுதலையைத் தரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

85 சதவீதத்திற்கும் அதிகமான இந்த வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு விழுந்த சாட்டையடி என்றும், இனி வரப்போகும் காலம் மக்களுக்கு மகிழ்ச்சியான காலமாக அமையும் என்றும் அவர் அந்த அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.