சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி உறுதி” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் முன்வந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர், “வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுகிறதே?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் சற்றே அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும்” என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தமிழகம் முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது