தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் ஜனநாயகம் தான் வெற்றி பெறும், பணம் ஒருபோதும் ஜெயிக்காது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பாதிப்பு இருக்காது. சுமார் 84 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை சில விமர்சனங்களை முன்வைத்தார்: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவையிலிருந்து வெளியூர்களுக்கும் செல்லப் பேருந்து வசதிகள் குறைவாக உள்ளதாக வாக்காளர்கள் புகார் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

“கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா தாராளமாக நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு நகைகளையும், அணிகலன்களையும் துணிச்சலாகக் கொடுக்கிறார்கள். சாதாரண மக்கள் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்றாலே பிடிக்கும் அதிகாரிகள், இந்த முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் மாநில அரசு ஊழியர்கள் என்பதால், அவர்கள் முறையாகச் செயல்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைச் சரியாக அமல்படுத்தத் தவறிவிட்டனர். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய அவர், “கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அர்ஜுனன் போராட்டம் செய்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுகவின் தவறுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால், மக்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். தனது உடை குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எப்போதுமே பிரவுன் பேண்ட், வெள்ளைச் சட்டை தான் அணிவேன். ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் போன்றோரும் இதே போன்ற உடையை அணிகிறார்கள். நான் காவல்துறையிலிருந்து வந்தவன் என்பதால், அந்த நினைவாகவே இந்த உடையை அணிகிறேன். என்னை வேறு எதனுடனும் ஒப்பிடாதீர்கள்” என்று கூறினார்.

மேலும் இந்தத் தேர்தலில் பணத்தை மீறி ஜனநாயகம் வெல்லும், மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.