உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உருவா பகுதியில், வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த சுமார் 30 பேர், ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபே நாத் என்பவருக்குச் சொந்தமான எருமையை, இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்துள்ளது.

இது தெரியாமல், அந்த எருமையின் பாலை கடந்த இரண்டு மாதங்களாக உரிமையாளரின் குடும்பத்தினர் மற்றும் பால் வாங்குபவர்கள் என 30 பேர் தொடர்ந்து குடித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி, அந்த எருமை தீவனம் உட்கொள்வதை நிறுத்திவிட்டு விசித்திரமாக நடந்து கொண்டதைக் கண்டு கால்நடை மருத்துவரை அணுகியுள்ளனர்.

சோதனையில் அந்த எருமைக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17-ஆம் தேதி எருமை உயிரிழந்தது. இந்தச் செய்தி பரவியதும், அந்த எருமையின் பாலைக் குடித்த 30 பேரும் மரண பயத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர்.

பாலை நன்றாகச் சுடவைத்து குடித்தால் பாதிப்பில்லை என்றும், பச்சைப்பாலோ அல்லது சரியாகச் சூடாக்கப்படாத பாலையோ குடித்திருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி மருத்துவர்கள் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தினர். ஒரே நேரத்தில் 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.