பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து முக்கியக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன, ஆனால் ஒரே ஒரு நாட்டால் மட்டுமே எப்போதும் பிரச்சனை” என்று பாகிஸ்தானை மறைமுகமாகத் தாக்கினார். இந்தியா எப்போதும் யாரையும் முதலில் தாக்குவதில்லை, ஆனால் யாராவது சீண்டினால் அவர்களைச் சும்மா விடமாட்டோம் என்று அவர் எச்சரித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் ஜெர்மனிக்குச் செல்லும் முதல் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவராவார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்து உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “முன்பு சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரல் அவ்வளவாக கேட்கவில்லை, ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை உன்னிப்பாகக் கவனிக்கிறது” என்றார்.

ஜெர்மனியில் வசிக்கும் 3 லட்சம் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான பாலமாக இருப்பதாகப் பாராட்டிய ராஜ்நாத் சிங், 2026-ஆம் ஆண்டு இந்தியா-ஜெர்மனி இடையிலான 75 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் குறிப்பதாகவும் தெரிவித்தார்.

ராணுவ வலிமை மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதால், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.